fbpx
Homeபிற செய்திகள்மக்கள் களத்தில் வாகைசூடிய வினேஷ் போகத்!

மக்கள் களத்தில் வாகைசூடிய வினேஷ் போகத்!

போராட்ட களத்திலும், ஒலிம்பிக் மல்யுத்த களத்திலும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு இதற்கு மேல் போராட தெம்பில்லை எனக் கூறினாலும், மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான பிரதிநிதியாக தலைநிமிர்ந்து புதுத் தெம்புடன் போராடி வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் வினேஷ் போகத்.

பாஜக 3வது முறையாக ஹரியானாவில் ஆட்சியை பிடித்துள்ளது. இருந்தாலும், அங்கு வாகை சூடிய காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்தின் வெற்றி இந்தியா முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட வீராங்கனை வினேஷ் போகத், இறுதி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுப்பார் என்றிருந்த நிலையில், 100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவுக்கு தங்கம் வென்று தருவார் என்ற பலரும் எதிர்நோக்க, எனக்கு இதற்கு மேல் போராட சக்தியில்லை என்று தனது மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.

அதன் பிறகு தனது அடுத்த களத்தை உடனடியாக தேர்வு செய்தார். ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அடுத்த ஒரே மாதத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி ராகுல் காந்தியை சந்தித்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார் வினேஷ் போகத்.

மல்யுத்த களத்தை போல, தேர்தல் களத்திலும் தடைகளை சந்தித்தார். மிக குறுகிய காலத்தில், உட்கட்சியினர் பலரது எதிர்ப்புகளையும் மீறி வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். கடந்த 2019இல் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற மொத்த வாக்கு 12 ஆயிரம் தான்.

ஆனால் , இந்த முறை வினேஷ் போகத் பெற்ற வாக்குகள் 65,080 ஆகும். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட சுமார் 6 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார் வினேஷ் போகத்.

குடும்ப சூழ்நிலை, மல்யுத்த களம் , போராட்ட களம் என அத்தனை தடைகளையும் மீறி மக்கள் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி, ஒரு அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் களம் கண்டார். தற்போது மக்கள் அளித்த தீர்ப்பில் வென்று காட்டியுள்ளார் வினேஷ் போகத்.

அவர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி இருந்தாலும் அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தடைகளை படிக்கற்களாக மாற்றி முன்னேற துடிக்கும் பலரது கனவுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் வினேஷ் போகத்!

படிக்க வேண்டும்

spot_img