காசநோய் ஒழிக்கும் அவசியத்தை அனைவரும் அறிந்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரை காசநோய் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த வாரத்தை அனுசரிக்கும் விதமாக தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று (20ம் தேதி) நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் ஜி.திரிஷா வரவேற்புரை ஆற்றினார். வேளாண்மை கல்லூரி மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.அஜீமா தஹ்ஸீன் முன்னுரை ஆற்றினார். கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர்.மா.தேரடிமணி தலைமை தாங்கிப் பேசினார்.
துணை இயக்குனர் (மருத்துவப் பணிகள் – காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடையே பேசுகையில், காசநோய் என்பது பரம்பரை நோய் அல்ல. அது காற்றின் மூலம் பரவும் ஒரு வகை தொற்றுநோய். இந்தியாவில் காசநோயினால் ஐந்து நிமிடத்திற்கு இரண்டு பேர் மரணம் அடைகிறார்கள்.
உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு காசநோயாளிகள் இந்தியாவில் உள்ளனர்
என்றார். மாணவ, மாணவியர்கள் காசநோய் சம்பந்தமாக சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டார்கள்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஷோபா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தீர்வு முறை அமைப்பாளர் திரு.ச.குப்புசாமி, மாவட்ட அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் திரு.பா.மோகன், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் முனைவர்.பா.த.ரமேஷ் மற்றும் வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.