fbpx
Homeதலையங்கம்இரட்டை இலை யாருக்கு? விலகப்போகும் மர்மம்!

இரட்டை இலை யாருக்கு? விலகப்போகும் மர்மம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் நடந்தன. சசிகலா சிறைக்கு சென்றது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் என அதிமுகவில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி வகித்தார். ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவி வகித்தார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சினை எழுந்தது. இதற்கிடையில் டிடிவி.தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார்.

மேலும், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியுமாக பிரிந்தது. இதனால் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. இரட்டை இலை சின்னமும் முடங்கும் நிலைக்கு வந்தது. இதில் எடப்பாடி தலைமையில் அதிமுக செயல்பட தொடங்கியது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதிமன்றமும் கட்சியினர் விருப்பப்படி எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனது செல்லும் என்று கூறிவிட்டது. பின்னர் அதிமுக எடப்பாடி தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது. எந்த முயற்சியும் எடுபடாமல் போய், சசிகலா முடங்கிக்கிடக்கிறார்.

எனினும் பழைய வழக்குகள் இன்னும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்ற உட்கட்சி பஞ்சாயத்து மீண்டும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்குப் போயிருக்கிறது. அதிமுக கூட்டணிக்காக பாஜக தலைமை பகீரத பிரயத்தனம் செய்துவருகிறது. ஆனால் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, இல்லவே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இரட்டை இலை சின்னத்துக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சம் அதிமுக-வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தேன். இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில், “சூரியமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும்” என உத்தரவிட்டது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் ஜனவரி 13-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் இறுதி வாய்ப்பை அளித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் என்பது அதிமுக-வின் பிரம்மாஸ்திரம். அது யாருக்குச் சொந்தம் என்ற மர்மம் விலகும் நாள் ஜனவரி 13, 2025.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பே இறுதித்தீர்ப்பாக அமையப்போகிறது. அது யாருக்கு பொங்கல் விழா பரிசாக கிடைக்கப்போகிறதோ?
பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img