அசாம் மாநிலம், திப்ரூகரில் ரூ.100 கோடியில் கட்டப்படும் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (சிஆர்ஐஒய்என்) அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. வடகிழக்கு இந்தியாவில் முதல்முறையாக படுக்கையுடன் கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையாக இது அமைய உள்ளது.
இவ்விழாவில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மத்திய துறை முகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.
இருதய வாஸ்குலர் நோய்களுக்கான சிறந்த இயற்கை மருத்துவமனையாக இது அமைய உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பற்றிய பாரம்பரிய அறிவுக்கும், நவீன தொழில்நுட்பக் கருவிகளுக்கும் இடையே அறிவியல் ரீதியாக சரியான மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பைக் கொண்டுவரும் நோக்கத்துடன், ரூ.100 கோடி முதலீட்டில் சுமார் 15 ஏக்கர் பரப் பளவில் இந்த மருத்துவமனை அமைய உள்ளது.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஆயுஷ் இயக்கம் ஒரு முன்னோடி சக்தியாக உருவெடுத்து மிகப்பெரிய ஊக்கத்தை பெற்றுள்ளது.
உலகளாவிய ஆரோக்கிய இயக்கம், இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்தை வடகிழக்கு அதிகார மையமாக மாற்றுவதில் பிரதமர் மோடியின் அயராத கவனம் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை உருவாக்குகிறது.
திப்ரூகரில் 100 படுக்கைகள் கொண்ட மருத்து வமனையுடன் கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் முதல் மத்திய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இருதய மறுவாழ்வு, நீரிழிவு மறு வாழ்வு, என்சிடி அபாயத்தை குறைத்தல் உள்ளிட்ட துறைகளில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த நிறுவனம் வசதிகளை வழங்கும் என்றார்.