fbpx
Homeதலையங்கம்அரசியல் நாகரீகம் தமிழகத்தில் மலரட்டும்!

அரசியல் நாகரீகம் தமிழகத்தில் மலரட்டும்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசு முறைப் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ளார். அவரது முயற்சியால் துபாயில் 5 நிறுவனங்களுடன் ரூ.2600 கோடி முதலீட்டை ஈர்த்து 9700 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன.

இந்த நிலையில் முதல்வரின் துபாய் பயணம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அவதூறாக பேசி வருவதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.

அண்ணாமலையோ, ரூ.5 ஆயிரம் கோடி துபாய் மர்ம பயணம் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ள திமுகழகம், மன்னிப்பு கேட்க வேண்டும், ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும் என அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முதலமைச்சரின் துபாய் பயணம், எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த உண்மையை மறைத்து விட்டு அண்ணாமலை ஆதாரமற்ற புகார்களை பொதுவெளியில் பேசி வருவது அருவறுப்பு தரும் அநாகரீகச் செயலாகும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறி இருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனோ, அண்ணாமலை அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசி வருகிறார். அவருக்கு கவனஈர்ப்பு ஃபோபியா வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இடையே ஏன் இந்த கரடுமுரடான மோதல் போக்கு? ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்குவது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையான ஒன்று தான். ஆனால் அதில் அரசியல் நாகரீகம், பொறுப்புணர்வு அவசியம்.

ஐபிஎஸ் அதிகாரியாகவே இருந்தாலும் ஆதாரமின்றி யாரையாவது கைது செய்ய முடியுமா? அது போலத்தான் நாடே போற்றும் ஒரு முதல்வர் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் போது யாராக இருந்தாலும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ரூ.5000 கோடி குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அண்ணாமலை பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் மட்டுமா கேள்வி கேட்பார்கள், மக்களும் கேட்பார்கள் அல்லவா?

அரசியல் நாகரீகம் தமிழகத்தில் மலர வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img