fbpx
Homeதலையங்கம்ஆசிரியர்கள் - மாணவர்கள் மோதலுக்கு என்ன தீர்வு?

ஆசிரியர்கள் – மாணவர்கள் மோதலுக்கு என்ன தீர்வு?

சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழக பள்ளிகளில் இருந்த நிலை, இப்போதைய மாணவர்களுக்கு தெரியாது.

போலீஸ் கையில் லத்தி இருப்பதைப் போல ஆசிரியர் கையில் பிரம்பு இருக்கும். அவர் கொடுக்கும் அடியால் உள்ளங்கையும் புறங்கையும் சிவந்து போகும்.

அந்த அடிகளெல்லாம் மாணவர்களின் உயர்வுக்கு படிக்கல்லாகவே பார்க்கப்பட்டது. அப்போதெல்லாம் பெற்றோர்கள் ஏன்? என்றுகூட கேட்கமாட்டார்கள்.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அடிக்கவே கூடாது என்று அரசே சொல்லி விட்டது. சரி, தவறிழைக்கும் மாணவரை கண்டிக்கவும் ஆசிரியர்கள் தயங்கும் நிலை தான் தற்போது காணப்படுகிறது.

கரூரில் முடிவெட்டச் சொன்ன ஆசிரியரை மாணவன் தாக்க முற்பட்ட சம்பவம், தேனி மாவட்டம் தேவாரம், தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் தாமதமாக வந்த மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன், சேலம் மாவட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடி சரியாக வெட்டவில்லை என்று கூறிய தலைமையாசிரியரை பீர் பாட்டிலை கொண்டு தாக்க முயன்ற மாணவன் என அண்மை நாட்களாக இத்தகைய அறுவறுக்கத்தக்க சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

பெரும்பாலான சம்பவங்கள் அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்றுள்ளது. ஆசிரியர் & மாணவர்கள் இடையேயான இத்தகைய விரும்பதகாத நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் நடைபெற்றுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் ஆசிரியர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடருமேயானால் பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் ஒருவித மன அழுத்தத்திலேயே செயல்படக்கூடிய நிலை ஏற்படும். இதனால் மாணவர்களின் கல்விதான் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டுகின்றனர் கல்வியாளர்கள்.

வீட்டில் அடங்காத பிள்ளை பள்ளியில் அடங்கும் என்கிற சொல்லாடல் உண்டு. அந்த அளவிற்கு ஆசிரியர்களின் கண்டிப்புடன் மாணவர்கள் கல்வி பயின்ற சூழல் மாறி தற்போது ஆசிரியர்கள் மாணவர்களை கண்டு அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

மாணவர்களை நெறிப்படுத்த ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் இல்லை என்பதே உண்மை. மாணவர்களை கண்டிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் குறைத்துக் கொண்டுள்ளனர்.

பள்ளி வளாகங்களில் நடைபெறும் மோதல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள், ஒரு காலத்தில் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இடம்பெற்றது.

இதன் வாயிலாக மாணவர்களுக்கு நல்லொழுக்கம், சுயக்கட்டுப்பாடு, நீதிபோதனை கதைகள் சொல்லப்பட்டு தவறான பாதைகளுக்கு மாணவர்கள் செல்வதை தவிர்ப்பதற்கு இந்த நீதிபோதனை வகுப்புகள் உதவின.

ஆனால் தற்போது நீதிபோதனை வகுப்புகள் எந்த பள்ளியிலும் இல்லை என்பதும் இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்கின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது பள்ளிக்கல்வித்துறை முயற்சியால் பள்ளி வளாகங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கவே கல்வி மேலாண்மை குழுக்கள் அமைக்க முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் வரக்கூடிய நாட்களில் இத்தகைய சம்பவங்கள் குறையும் என்கின்றனர்.

ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையே மோதல் போக்கு ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம். ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பள்ளிகளில் பாதுகாப்பான சூழல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அவர்கள் மனதில் இருக்கும் கல்வி போதிக்கும் ஆர்வத்துக்கு குந்தகம் ஏற்படாமல் தடுத்தே ஆக வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து வழிகாட்ட வேண்டும்.

அப்போது தான், இன்றைய மாணவர்கள் நாளைய இந்நாட்டின் மன்னர்கள் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும்!

படிக்க வேண்டும்

spot_img