fbpx
Homeதலையங்கம்ஆளுநர் அவர்களே, தாமதம் வேண்டாம்!

ஆளுநர் அவர்களே, தாமதம் வேண்டாம்!

நீட் தேர்வு விலக்கு மசோதாவை, தமிழக சட்டப்பேரவையில் 2 வது முறையாக நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது.

அதனை அரசியலமைப்புச் சட்டப்படி குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருக்க வேண்டும். அதனை உடனடியாக அவர் செய்யாததால் அரசியல் கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன.

அது மட்டுமல்ல, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு மசோதாவுக்குக் கூட ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இது அவர் மீது தமிழக மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசுகையில், நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட வேண்டும். நீட் மசோதா, 7 பேர் விடுதலை, சித்த பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட ஏழு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ளன.

ஆளுநர் சட்டப்படி செயல்பட வேண்டும். மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதா..? சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும்.

7 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசை எப்படி நடத்துவது..? ஆளுநர் ரவியின் செயல் வெட்கக்கேடானது என சரமாரி கேள்வி சாடினார். தமிழகத்தில் என்ன காட்டாட்சியா நடத்துகிறோம்? என்று அவர் காட்டமாக வினவினார்.

ஒருபுறம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவின் நிலை குறித்து ஆளுநர் ரவியுடன் ஆலோசனை நடத்திய அதே நேரத்தில் மறுபுறம் மக்களவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக முழக்கமிட்டது.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

இதனை ஆளுநரே உரிய காலத்தில் அறிவித்து இருந்தால் அவர் மீது மக்கள் மத்தியில் நல்ல மரியாதை ஏற்பட்டு இருக்கும் அல்லவா? அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு உருவானால் அது மக்களுக்கு நல்லதா? தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநர் உரையின்றி சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டதால் அம்மாநில ஆளுநருக்கும் முதல்வருக்கும் மோதல் ஏற்படுமோ என மக்கள் அஞ்சினர்.

ஆனால், மக்களின் நலன் கருதி நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மக்கள் நலன் தான் முக்கியம் என்று சொன்னாரே அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்.

மாநில அரசுடன் மோதல் போக்கை கையிலெடுக்காமல் மக்களுக்காகத்தான் ஆளுநர் என்பதைச் சொல்லாமல் சொன்னாரே, அவரது பெருந்தன்மைக்கு ஈடு இணை ஏது?

அது ஒருபுறமிருக்கட்டும். தமிழ்நாட்டு மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், தமிழக அரசு தடையின்றி செயல்பட்டு மக்களுக்கு நல்லவற்றைச் செய்ய வேண்டும் என விரும்பவராக இருந்தால் ஆளுநர் உடனடியாக நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

மற்ற மசோதாக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.
அடுக்கடுக்கான எதிர்வினைகளுக்கு பிறகாவது ஆளுநர் இறங்கி வந்திருக்கிறாரே, அதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

இனி, எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img