fbpx
Homeதலையங்கம்இதயத்தை கனக்க வைக்கும் விலைவாசி - எச்சரிக்கை!

இதயத்தை கனக்க வைக்கும் விலைவாசி – எச்சரிக்கை!

அரிசி பருப்பு முதல் மின்சார கட்டணம் வரை அனைத்தும் விலை ஏற்றம் பெற்றுள்ளது, அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதம் 340 ரூபாய் விற்ற ஒரு கிலோ நல்லெண்ணய் இந்த மாதம் 377 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் இதே எண்ணெய் ஒரு கிலோ ரூபாய் 325 க்கு விற்றது. இந்த அதிரடி விலையேற்றம் சாமானியர்களின் இதயத்தை கனக்க வைத்திருக்கிறது.

சிலிண்டர் விலை உயர்வு என்ற புளித்துப்போன ஒன்றைப்பற்றியே கவலைப்படும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் குடும்பத்தலைவிகள் தங்கள் அன்றாட வீட்டு செலவு உயர்ந்து வருவது கண்டு பொருமிக் கொண்டிருக்கின்றனர். இட்லி, தோசைக்கான ஈரமாவு விலை கூட எகிறி, பேச்சிலர்களையும் பேச்சு மூச்சு இல்லாமல் செய்துள்ளது.

தீபாவளிக்கு துணி வாங்க வழக்கத்தை விட குறைவாகவே குவிந்த கூட்டத்தினர் கூட, தாங்கள் வழக்கமாக வாங்கும் உள்ளாடைகள் விலை பத்து சதவீதம் விலை உயர்ந்திருப்பதாக முணுமுணுத்தனர்.

இந்த நிலையில் ஒன்றிய நிதியமைச்சகம் பொருளாதார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச அரசியலில் நெருக்கடி ஏற்பட்டால் எரிபொருள் விலை உயர்ந்து, விநியோக அமைப்பு பாதிக்கப்பட்டு பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்தது.

இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்ந்தது. மேலும், சர்வதேச வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
இவை எல்லாம் சேர்ந்து இந்தியா உள்பட பல நாடுகளில் பணவீக்கத்தை கடுமையாக உயர்த்திவிட்டன.

அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பானது 83.02 ரூபாய் என்ற அளவில் பெரும் சரிவை தற்போது சந்தித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், பெரும்பாலும் டாலரின் மதிப்பில்தான் வாங்குகிறோம். ஆகையால், டாலரின் மதிப்பு உயரும் போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயர தொடங்கியுள்ளது.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், சந்தையில் தக்காளி வரத்து குறைந்தால் விலை உயர்கிறது, அதேபோன்றுதான் டாலரின் மதிப்பும் உயர்ந்தது. அயல்நாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறியதன் காரணமாக, டாலர் கரன்சிகள், இந்தியாவை விட்டுச் சென்றன.

இதனால் இந்தியாவுக்கு டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்தும், பற்றாக்குறை காணப்பட்டதால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது.

எனவே, விலைவாசி மேலும் உயரப்போவது நிச்சயம். அதற்கு நம்மை நாமே தயார் செய்ய வேண்டியது தான் நிதர்சனம்!

படிக்க வேண்டும்

spot_img