fbpx
Homeதலையங்கம்எத்தனை அலைகள் வந்தாலும் திறமையாக சமாளிக்க முடியும்!

எத்தனை அலைகள் வந்தாலும் திறமையாக சமாளிக்க முடியும்!

கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவது மிக நல்ல அறிகுறி. மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இரண்டாம் அலையிலிருந்து நாம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம்.

அடுத்து மூன்றாம் அலைக்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அதை வெறும் எச்சரிக்கையாக கொள்ளாமல் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.

குறிப்பாக கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை குறிவைக்கும் என்று சொல்லப்படுகிறது. முதல் அலை வயோதிகர்களை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கியது.

இரண்டாம் அலை நடுத்தர வயதினரை கீழே புரட்டிப் போட்டது. அப்படியானால் மூன்றாம் அலை நிச்சயமாக குழந்தைகளைத்தான் குறிவைக்கும் என்று கணக்குபோட்டு கணித்து சொல்கிறார்கள்.

யாருடைய கணிப்பையும் புறக்கணிக்கும் நிலையில் இப்போது நாம் இல்லை.
குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் வரையிலான பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பெரியவர்களுக்கு இப்போது தடுப்பூசி வந்துவிட்டது. பெரும்பாலானவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால் இன்னும் குழந்தைகளுக்கு தடுப்பூசி வரவில்லை. வரும் முன் காக்கும் நடவடிக்கை மட்டுமே இப்போது அவர்களுக்கான பாதுகாப்பு.
சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் உடனடியாக போட்டுக் கொள்வது நல்லது.

பெற்றோருக்கு வரும் கொரோனா அவர்கள் மூலம் குழந்தைகளுக்கும் பரவும் வாய்ப்பு அதிகம். பெற்றோர்கள் வெளியே போய்விட்டு வர வேண்டிய சூழ்நிலையில் கைகளை அடிக்கடி கழுவுவது, மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது என்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மூன்றாம் அலையை எதிர்நோக்கும் வகையில் அரசும் தன் பங்கிற்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. குழந்தை மருத்துவ நிபுணர்கள் மற்றும் செவிலியர்களை தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க செவிலியர்களுக்கு உரிய பயிற்சிகளும் கொடுக்கப்படலாம்.

இரண்டாம் அலை படிப்படியாக குறைந்துவரும் நிலையில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அதற்குள் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம், பெற்றோர், ஆசிரியர்கள் என்று பலதரப்பட்டோரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மூன்றாம் அலை மட்டுமல்ல அதற்குபின் எத்தனை அலைகள் வந்தாலும் திறமையாக சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

படிக்க வேண்டும்

spot_img