fbpx
Homeதலையங்கம்ஓ.பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை?

ஓ.பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை?

அதிமுகவில் சசிகலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது.

அதன் பின்னர் அதிமுக தொண்டர்களின் கவனம் சசிகலா பக்கம் திரும்பி உள்ளது. சசிகலா தலைமையில் கட்சி செயல்பட்டால் தான் விமோசனம் கிடைக்கும் என்பது, அதிமுக வட்டாரத்தில் பரவலாக பேசு பொருளாகி விவாதம் நடந்து வருகிறது.

அண்மையில் சசிகலா, தினகரன் ஆகியோரை எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவிற்குள் கொண்டுவர வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி அதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்தனர். இது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.

இது தான் தக்க தருணமென சசிகலா காய் நகர்த்தத் தொடங்கிவிட்டார். ஆன்மிக பயணம் என்ற பெயரில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது திருச்செந்தூரில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, சசிகலாவை சந்தித்து பேசினார்.

அவரை கட்சியில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நீக்கி அறிவிப்பு வெளியிட்டனர். மேலும் தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்களுடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைக்கக் கூடாது என்பது விதி.

அப்படி இருக்க, நீக்கப்பட்ட முருகேசன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியிருக்கிறார். இங்கே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமே கட்சிக்கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறி இருக்கிறார்.

இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்தி விட்டு அவசரமாகச் சென்னை திரும்பி இருக்கிறார்.

நிர்வாகிகள் மீது ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் நடவடிக்கை எடுப்பது வாடிக்கை. அதிமுகவின் உச்சபட்ச பதவியான ஒருங்கிணைப்பாளரே கட்சி கட்டுப்பாட்டை மீறி இருக்கிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளதா?. ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா? எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தை எப்படி அணுகப்போகிறார், அதிரடி காட்டுவாரா-?. மோதல் முற்றுமா? சசிகலாவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்?.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன விடை? பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img