தலைநகர் புதுடெல்லியிலும் கொரோனா தலை விரித்து ஆடியது. பலி எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. அதன் விளைவாக 3 மாதத்திற்கு மேல் மொத்தமாக முடக்கப்பட்டது. தற்போது தினசரி பாதிப்பு 500 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் கஷ்டப்பட்டு கிடைத்த பலனை இழக்க தயாரில்லை என்று கூறி, அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவால் இன்னும் ஊரடங்கை முழுமையாக தளர்த்தவில்லை.
நமது மாநிலத்திலும் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் மேல் சென்று நடுங்க வைத்தது, பலி எண்ணிக்கையும் 500 ஐ நெருங்கியது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை அறிவித்தனர். இதை சாதகமாக்கி கட்டுப்பாடு இல்லாமல் சுற்ற நேர்ந்தால் மீண்டும் கொரோனா விரட்டி விரட்டி கொத்த ஆரம்பித்துவிடும்.
ஏற்கெனவே இன்னும் 2 மாதத்தில் 3வது அலை இதைவிட வேகமாக அசுரத்தனமாக தாக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்த நிலையில் அதற்கான வாய்ப்பை கொடுக்காத வகையில் நாம் தான் கட்டுப்பாட்டோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் மறைமுகமாக தொழில்களில் ஈடுபடுவது, போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சுற்றுவதை பலர் பெருமையாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் தனக்கும் தன்னை சுற்றி இருப்பவருக்கும் ஆபத்தை தான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். ஊரடங்கு காலத்தில் மிக கடுமையாக யாரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவில்லை என்பதை அவரவர் மனசாட்சியே சொல்லும்.
இருந்தாலும் கிடைத்துள்ள தளர்வை பயன்படுத்தி கொரோனாவுக்கு வழிவிட்டு விடக்கூடாது. இன்னும் பலி எண்ணிக்கை குறிப்பிட்ட அளவுக்கு குறையவில்லை. தொற்றும் கணிசமாக குறையவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பந்து நம் பக்கம் தள்ளப்பட்டுள்ளது. அதை சரியாக அடித்து கொரோனாவை வீழ்த்தி நோய் ஓடப்போகிறதா? அல்லது கொரோனாவிடம் நாம் வீழப் போகிறோமா? என்பதற்கு விடை சொல்ல வேண்டியது களத்தில் நிற்கும் பொதுமக்கள் தான்.