கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இரண்டு பெண்கள் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதனை பார்த்து உஷாரான போலீசார் அவர்களது கையில் இருந்த கேனை பிடுங்கி எறிந்தனர்.
விசாரணையில் தற்கொலைக்கு முயன்றது மேட்டுப்பாளையம் உக்கான் நகரை சேர்ந்த அமுதா (வயது 50) மற்றும் நாகமணி(46), என்பது தெரிய வந்தது. அப்போது போலீசாரிடம் அமுதா கூறியதாவது:-
நான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எனது மகளின் பிரசவத்திற்காக சென்றேன். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது எனது 1.5 சென்ட் வீட்டை ஒரு நபர் ஆக்கிரமித்து குடி புகுந்தார்.
நான் சென்று கேட்டபோது அவர்கள் வீட்டை காலி செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த நபரிடம் இருந்து எனது வீட்டை மீட்டு தர வேண்டும்.
தொடர்ந்து நாகமணி போலீசாரிடம் கூறுகையில், ‘’நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தாயார் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக நான் எனது தம்பி வீட்டிற்கு சென்று ஒரு மாதம் தங்கி விட்டேன்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது எனது வீட்டின் பூட்டை உடைத்து வேறு ஒரு நபர் குடியேறி இருந்தார். இது தொடர்பாக தாசில்தார், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எங்களுக்கு நியாயம் கிடைக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.