fbpx
Homeதலையங்கம்கோவையின் அமைதியை சீர்குலைக்க அனுமதியோம்!

கோவையின் அமைதியை சீர்குலைக்க அனுமதியோம்!

கோவை கோட்டை மேடு பகுதியில் உள்ள இந்து கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்து அந்த காரை ஓட்டி வந்த நபரே பலியானார். இதனால் கோவையில் உருவான ஒரு அசாதாரணமான சூழலால் பதற்றம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக 5 பேரை கோவை போலீசார் அதிரடி கைது செய்தனர். இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்ததும் கோவை போலீசார் விரைந்து செயல்பட்டதும், டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்துக்கு விரைவாக வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியதும் பொதுமக்களின் அச்சத்தை தணிக்க உதவியது.

விசாரணையில், கோவையில் குண்டு வெடிப்புகளை நடத்தும் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த சதி அம்பலமாகி இருக்கிறது.

குற்றச் செயலுக்கான சதி வேலைகள் எல்லை தாண்டி அமைந்திருக்கக் கூடும் என்பதால் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதோடு, கோவை நகரில் புதிய போலீஸ் நிலையங்களை அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டு இருக்கிறார். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கோவையில் தீவிரவாதச் செயலை அரங்கேற்ற முயற்சி நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இறைவன் கோவை மாநகர மக்களைக் காப்பாற்றி இருக்கிறார் என்பதே உண்மை. இந்த படுபாதகச் செயலில் ஈடுபடத் துணிந்தவர்கள் இன்னும் கோவையில் மறைந்திருக்கக் கூடும்.

அவர்களையும் கண்டறிந்து தீவிரவாதக் கும்பலை அடியோடு துடைத்தெறிய வேண்டும் என்பதே மாநகரில் வாழும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்… இன்னபிற சமூக மக்களின் ஒரே எதிர்பார்ப்பு. இதற்கு ஒத்துழைப்பு தருவதாக இஸ்லாமிய அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

இந்த விஷயத்தில் காவல்துறை மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்தபோதிலும் உளவுப்பிரிவு சரிவர செயல்படாமல் போய்விட்டதோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது. விழிப்புடன் கண்காணிக்கப்பட வேண்டிய பகுதியிலேயே கார் வெடிப்பு நடந்துள்ளது.

இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதபடி உளவுப் பிரிவு உஷாராக இருக்க வேண்டும். உளவு அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

விசாரணையை தற்போது தேசிய பாதுகாப்பு முகமை முன்னெடுத்து உள்ளது. மீண்டும் தீவிரவாதம் கோவையில் தலையெடுக்க முடியாத அளவுக்கு அதன் நடவடிக்கை இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மாநில காவல்துறையும் முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளது.
கோவை மக்கள் ஏற்கனவே நடந்த தொடர் குண்டுவெடிப்புகளால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

மீண்டும் அதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதே கோவை மக்கள் மனதில் எழுந்துள்ள ஒரே எண்ணம்.

கோவை மாநகர மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அமைதியை சீர்குலைக்க அனுமதிக்க முடியாது.

இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை!

படிக்க வேண்டும்

spot_img