fbpx
Homeதலையங்கம்கோவையின் வளர்ச்சிக்கு உதவும் தமிழக பட்ஜெட்!

கோவையின் வளர்ச்சிக்கு உதவும் தமிழக பட்ஜெட்!

தமிழ்நாடு பட்ஜெட் 2022ஐ தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட் இளைஞர் நலன், மக்கள் நல்வாழ்வு, சமூக நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், சிறுபான்மையினர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் என அனைவரின் நலன் மீதான அக்கறையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஊரக வளர்ச்சித் துறை, மகளிர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, உயர்கல்வித்துறை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

பொருளாதார அறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டை பாராட்டி வருகின்றனர். தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கூடுதல் சிறப்பம்சமாக பட்ஜெட்டில் தொழில் துறையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. ஆம்; தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் நேரடியாகயும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கியிருக்கின்ற நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சரின் அறிவிப்பு சிறந்த நிதி மேலாண்மையைக் காட்டுவதாகவும், மாற் றத்தை நோக்கிய வளர்ச்சிக்கான பட்ஜெட் என்றும் தொழில் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

சிறு குறு தொழிலுக்கு ரூ.911 கோடி ஒதுக்கி யது, ஜெர்மன் டெக்னாலஜி கொண்ட 4.0 நவீன தொழில்நுட்பம் அறிமுகம், ஐ.டி திறன் மேம்பாடு, ஏற்றுமதிக்கான கட்டமைப்பு, தொழில் முதலீட்டு மானியம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம், கயிறு தொழிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, நீண்ட நாள் கோரிக்கையான தொழில் பூங்கா அமைத்தல் அறிவிப்புகள் சிறு குறு தொழில் மேம்பட உதவுமெனக் கூறி பட்ஜெட்டை வரவேற்று உள்ளனர்.

மேலும், வேளாண் துறைக்கான அறிவிப்புகளும், இலவச மின் இணைப்புகளும், சிறு குறு தொழில் மின் மோட்டார் விற்பனை அதிகமாக உதவுமெனவும் கோவை தொழில்துறை அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். சிறு குறு தொழிலை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்கின்ற பட்ஜெட் அறிவிக்கப்பட்டதாகவும் சிறு குறு தொழில் முனைவோர் தெருவித்திருக்கின்ற நிலையில், மானிய கோரிக்கையில் மூலப்பொருட்களின் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மொத்தத்தில் கோவை மாவட்ட வளர்ச்சிக்கு உதவும், சிறுகுறு தொழில்களுக்கு உத்வேகம் தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பாராட்டுக்கள்!

படிக்க வேண்டும்

spot_img