சேலம் மாவட்டத்தில் கடந்த 18 மாதங்களில் 11,869 மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மலைவாழ் மக்களின் முன்னேற்றத்தினைக் கருத்திற்கொண்டு, பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம்தெரிவித்ததாவது:
தமிழக அரசு மலைவாழ் மக்களின் மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மலைவாழ் மக்கள் அதிகம் வசித்துவரும் சேலம், நாமக்கல், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் பழங்குடியினர் நல திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிக மலைக் கிராமங்களைக் கொண்ட மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழ்கிறது.
373 மலைக் கிராமங்கள்
சேலம் மாவட்டத்தில் 373 மலைக் கிராமங்களில் சுமார் 1,67,047 மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைப் பகுதியில் ஏற்காடு, வாழவந்தி, மாரமங்கலம், குண்டூர், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் பெரிய கல்வராயன்மலை, சின்ன கல்வராயன்மலை, வடக்கு நாடு, தெற்கு நாடு,வாழப்பாடி வட்டத்தில் ஆலடிப்பட்டி, அருநூத்துமலை, புழுதிக்குட்டை, கெங்கவல்லி வட்டத்தில் பச்சமலை, எடப்பாடி, ஓடைகாட்டுப் புதூர் மற்றும் கொடுங்கல், தலைவாசல் வட்டத்தில் சின்ன கிருஷ்ணாபுரம், பெரிய கிருஷ்ணாபுரம், பனமரத்துப்பட்டியில் ஜருகுமலை, கோணமடுவு, சூரியூர், குரால்நத்தம், கொளத்தூர் வட்டத்தில் பாலமலை, சின்ன தண்டா, நீதிபுரம், அயோத்தியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
70 நலப்பள்ளிகள்
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குழந்தைகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்தும் வகையில் 42 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட துவக்கப் பள்ளிகளும், 5 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகளும், 10 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளிகளும், 4 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளும், 7 அரசு பழங்குடியினர் நல மாணவ, மாணவியர் விடுதிகளும், 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 70 அரசு பழங்குடியினர் நல பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
இணையதளத்தில்
மலைவாழ் மக்களுக்கும் மற்ற பிரிவினரைப் போலவே இணையதளம் வாயிலாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் வழங்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் கடந்த 18 மாதங்களில் 11,869 மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
திட்டங்கள்
மலைவாழ் மக்களுக்கு கறவை மாடு வழங்கும் திட்டம், தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டம், தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பெட்டிக்கடை வைக்கும் திட்டம், பாக்குமட்டை தயாரிக்கும் இயந்திரம் வழங்கும் திட்டம், தேனீ வளர்த்தல் திட்டம், பண்ணைக் குட்டை அமைத்தல் திட்டம், பழங்குடியினர் நல வாரிய அட்டைகள் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் தொடர்பான பயிற்சிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டில் தொகுப்பு வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் வழங்கும்திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சமும், 5 விவசாயிகளுக்கு போர்வெல் அமைப்பதற்கு ரூ.10 லட்சமும், சோலார் மோட்டார் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சமும், மின் மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு 4 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சூரிய ஒளி விளக்கு வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 2,061 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டைகளும், 956 நபர்களுக்கு தனிநபர் வன உரிமைப் பட்டாக்களும், 68 நபர்களுக்கு சமூக வன உரிமைப் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
பழங்குடியினர் நலத்துறை தொடர்பான விவரங்கள் பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 305-ல் செயல்பட்டுவரும் திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0427 – 2414840 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்துள்ளார்.
“ஊரே மகிழ்ச்சி”
சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் கூறியதாவது:
இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நானும், கணவரும் கூலி வேலை, ஆடு மேய்த்தல்தொழில் செய்கிறோம். எங்கள் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. கல்வி,வேலைவாய்ப்புகளிலும், நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் என்பது அவசியமான ஒன்றாகும்.
தற்போது அரசு இணைய வழி மூலமாக சாதிச் சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து பல வருடங்களாக கிடைக்காத சாதிச் சான்றிதழை வழங்கினார். ஊரே மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமையை எளிதாக்கி சாதிச் சான்றிதழ் வழங்கி, கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி என்றார்.
“சான்று கிடைத்தது
ஒளி பிறந்தது”
கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி கூறியதாவது:
12-ம் வகுப்பை நிறைவுசெய்து, மேற்படிப்புக்காகக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முயற்சி செய்து வந்தேன். சாதிச் சான்றிதழ் இல்லாததால் படிப்பைத்தொடர்வது சிரமமாக இருந்தது.
எனது மூத்த சகோதரி 12-ம் வகுப்பு முடித்தபோது, சாதிச்சான்றிதழ் கிடைக்காததால், மேற்படிப்பை தொடர இயலவில்லை.
தற்போது, அரசின் நடவடிக் கையின் பேரில் நேரடியாக வந்து சாதிச் சான்றிதழ்களை வழங்கினார்கள். சாதிச் சான்றிதழ்களை வழங்கி, குடும்பத்தில் ஒளி ஏற்றி வைத்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்தில் தனிகவனம் செலுத்தி, சிறப்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.
இதன்மூலம், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதோடு, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பினைப் பெற்று பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யும். இத்தகைய நடவடிக்கை முதல்வரின் நிர்வாகத் திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
தொகுப்பு:
ச. சுவாமிநாதன்,
செய்தி – மக்கள் தொடர்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.