fbpx
Homeபிற செய்திகள்ஜருகுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் சந்தைப்படுத்தி ரூ.1.50 லட்சம் லாபம் ஈட்டிய...

ஜருகுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் சந்தைப்படுத்தி ரூ.1.50 லட்சம் லாபம் ஈட்டிய விவசாயிகள்

சேலம் மாவட்டம் ஜருகுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள், தங்கள் பகுதியின் முக்கிய விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக சந்தைப்படுத்தி நடப்பாண்டில் மட்டும், சுமார் ரூ.1.50 லட்சம் லாபம் பெற்று பயனடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி தங்களது விளைப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட வழிவகை செய்யப் பட்டுள்ளது.

ஜருகுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) முனைவர் நாசர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

விவசாயிகளின் முன்னேற் றத்தை கருத்தில் கொண்டு முதல்வர் வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களாக தரம் உயர்த்தி நேரடியாக சந்தைப்படுத்தி அதிக லாபம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் நோக்கம்

அந்தவகையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு உயரிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்களை அளித்து அதன்மூலம், சந்தைப்படுத்த க்கூடிய மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய பயிர்களை தேர்ந்தெடுத்து, நேரடி சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் தங்களது விளைபொருளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நோக்கமாகும்.

ரூ.4.18 கோடி மானியம்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்குவதற்கு முழு மானியமாக ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. சமபங்கு மானிய நிதியுதவி ரூ.5 லட்சமும், ஆரம்ப நிலை முதலீட்டிற்கான நிதியுதவி ரூ.5 லட்சமும் முழுமானியமாக வழங்கப்படுகிறது.

இதுதவிர நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டத்தில் மதிப்பு கூட்டும் இயந்திரத்திற்கான நிதியுதவி ரூ.10 லட்சமும், உணவு பாதுகாப்பு திட்டத்தில் மதிப்பு கூட்டும் இயந்திரத்திற்கான நிதியுதவி மொத்த தொகையில் 30 சதவீத மானியமும், உச்சவரம்பாக ரூ.15.40 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

இதற்கென மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.4.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேச்சேரி, பனமரத்துப்பட்டி, ஆத்தூர் ஆகிய இடங்களில் தலா 2ம், தலைவாசல், கொளத்தூர், சங்ககிரி, எடப்பாடி, அயோத்தியாபட்டிணம், கொங்கணாபுரம், ஏற்காடு, ஓமலூர் என 14 இடங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலுடன் விவசாயிகளை ஒருங்கிணைத்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

1000 உறுப்பினர்கள்
சேலம் மாவட்டம் ஜருகுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிறு வனமானது பனமரத்துப்பட்டி வட்டாரம்- சாமக்குட்டப்பட்டி, ஜருகுமலை, தும்பம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் குரால்நத்தம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 18 கிராமங்களை சார்ந்த 1000 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு மலைவாழ் இனத்தை சார்ந்த விவசாயிகள் அரளி மலர் சேகரிப்பு மையம் மூலம் மலர் கொள்முதல் மற்றும் விற்பனை, இடுபொருள் மையங்கள் மூலம் உரம், பூச்சி மருந்து, நாற்றங்கால் விற்பனை, மண்புழு உற்பத்தி மற்றும் விற்பனை கைக்குத்தல் அரிசி உற்பத்தி செய்து விற்பனை உள்ளிட்ட தங்கள் பகுதியின் முக்கிய விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக சந்தைப்படுத்தி அதிக லாபம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும், இந்நிறுவனம் மூலம் சுமார் ரூ.1.50 லட்சம் லாபம் பெற்று விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இதுதவிர பனமரத்துப்பட்டியில் காய்கறி கொள்முதல் மற்றும் விற்பனை, ஓமலூரில் நாட்டுச்சர்க்கரை, மேச்சேரி, தலைவாசலில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள், பயறு கொள்முதல் செய்து இயந்திரம் மூலம் எண்ணெய் பிழிந்தெடுத்து மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் என விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இடைத்தரர்கள் இன்றி நேரடியாக விற்று பயனடையும் வகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இது குறித்து மேலும் தகவல் அறிய சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண்.404ல் இயங்கும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) நேரடியாகவோ அல்லது 0427-2417520 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு வேளாண்மை துணை இயக்குநர் நாசர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி, வேளாண் அலுவலர் தீபா பிரியதர்ஷிணி, உதவி வேளாண் அலுவலர் சிவகுமார், ஜருகுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பூமாலை, இயக்குநர் அரப்புளி ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img