மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.
தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது.
இப்படி மக்களிடம் சுரண்டப்படும் ஜி.எஸ்.டி வரியில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை உரிய காலத்தில் கொடுக்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருகிறது.
அதிலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதிக அளவில் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி வரியை அளித்துவரும் நிலையில். அதில் தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டிய பங்கு வராததால் பல மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாஜக ஆளாத அனைத்து மாநிலங்களும் இந்த வகையிலேயே வஞ்சிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொதித்தெழுந்திருக்கிறார். ஜிஎஸ்டி தொகைக்காக பாஜகவின் காலில் விழுந்து, கெஞ்ச வேண்டுமா? நாம் ஜனநாயகத்தில் தான் வாழ்கிறோமா? இந்தியா ஒரு கட்சி நாடாக மாறிவிட்டதா?
என மிகக்கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். எங்களாலும் ஜிஎஸ்டி வரியை கொடுப்பதை நிறுத்தி வைக்க முடியும் என்றும் ஆவேசப்பட்டார்.
மாநிலங்களின் ஜிஎஸ்டி தொகையை காலம் தாழ்த்தாமல் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஏனென்றால், ஜிஎஸ்டி போன்ற பெருந்தொகையை வைத்து தான் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகின்றன. அதனால் தான் ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகள் போர்க்கொடி உயர்த்துகின்றன.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு கையில் வைத்துக்கொண்டு காலதாமதம் செய்வது சரியல்ல.எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அனைவரையும் ஒரே மாதிரி பார்ப்பவள் தான் தாய்.
அதேபோல தனது குழந்தைகளான மாநில அரசுகள் மீது ஒன்றிய அரசு பரிவு காட்ட வேண்டும். இதில் ஆளுங்கட்சி மாநிலங்கள், பிற கட்சி மாநிலங்கள் என பாகுபாடு காட்டக்கூடாது. பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழாமல் ஒன்றிய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும். காலதாமதம் மாநில வளர்ச்சியைப் பாதிக்கும். இதில் சர்ச்சை தேவையில்லை.
ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்குக! மாநில மக்கள் வளமுடன் வாழ வழிவிடுங்கள்!