fbpx
Homeபிற செய்திகள்தடுப்பு சுவர் எழுப்பி தடுத்து விட முடியுமா?

தடுப்பு சுவர் எழுப்பி தடுத்து விட முடியுமா?

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியைத் திணிக்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அரும்பாடுபட்டு வருகிறார்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டு, சரியான எச்சரிக்கையை இந்தி, சமஸ்கிருத வெறியர்களுக்கு எதிராக விடுத்துள்£ர்.

‘‘நெருப்பை உரசிப் பார்க்கவேண்டாம்; இந்தியைக் கட்டாயமாக்கும் உங்கள் முயற்சிகள்மூலம் மற்றொரு மொழிப் போரைத் திணிக்காதீர்கள்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் திணித்து விபரீத விளைவுகளை அறுவடை செய்யாதீர்கள்’’ என்று தெளிவாக இடித்துரைத்து இருக்கிறார்.

அரசியல் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ் நாட்டில் – பா.ஜ.க. தவிர மற்ற அத்துணைக் கட்சிகளும் இந்தித் திணிப்புக்கு எதிராகவே குரல் எழுப்பி, கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த ஒற்றுமையை ஒருபோதும் யாராலும் சீர்குலைக்க முடியாது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம், ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை நீடிக்கும் என்று அந்நாள் பிரதமர் நேருவின் அரசியல் வாக்குறுதி தனிச் சட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்தியை தமிழகம் மட்டுமா எதிர்க்கிறது? பஞ்சாப் எதிர்க்கிறது. மேற்கு வங்கம் எதிர்க்கிறது. வடகிழக்கு நாகாலாந்து, மேகாலயா, அசாம் எதிர்க்கின்றன. -ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் எதிர்க்கிறது. ஏன் மகாராஷ்டிரா கூட எதிர்க்கிறது.

இதை ஒன்றிய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொழி உணர்ச்சிபூர்வமானது. அதில் கைவைப்பது மின்சாரத்தில் கை வைக்கும்- விபரீத விளையாட்டு என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறி இருப்பது உண்மையிலும் உண்மை என்பதை பிரதமர் மோடியும் அமித்ஷா போன்றவர்களும் உணரவேண்டும்.

மத்தியப் பல்கலைக் கழகங்களில் இனி இந்திதான் பயிற்சி மொழி என்றும் அனைத்திந்திய போட்டித் தேர்வுகள், ஒன்றிய அரசுப் பணிகளுக்கானவை இனி இந்தியில்தான் என்றும் அறிவிப்பது கொடுமையானது மட்டுமல்ல.

இந்தி பேசாத மாநில இளைஞர்கள், பல்கலைக்கழகத்தினுள்ளும், அரசுப் பணிகளுக்குள்ளும் நுழைய முடியாமல் செய்வது நியாயமா? இப்படித் திடீர் தடுப்புச் சுவர் எழுப்பினால் தடுத்து விடத்தான் முடியுமா?

தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தின் வரலாற்றைத் தெரிந்து ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.

அதனால் தான் மீண்டும் ஒரு மொழிப்போரைத் திணித்து விடாதீர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.

நாட்டில் வாழும் அனைவரையும் சமமான குடிமக்களாக கருதி வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

மீண்டும் ஒரு மொழிப்போர் நடத்தும் சூழல் தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும். புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி!

படிக்க வேண்டும்

spot_img