முழு அடைப்பு காரணமாக உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனு மதிக்கப்பட்ட நிலையில் சென்ற வாரம் தமிழக அரசு வெளியிட்ட ஓர் அறிவிப்பு கவனத்தை ஈர்க்கிறது. உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் உறைகளில் போட்டுக்கொடுப்பதை ஓட்டல் உரிமையாளர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
பார்சல் கட்டும்போது, பிளாஸ்டிக் கவர்களை எச்சில் தொட்டுப் பிரிப்பதும் வாயில் ஊதி திறப்பதும் ஊழியர்களின் வழக்கமாக இருக்கிறது.
இதனால் கொரோனா பரவலுக்கு சாத்தியமிருப்பதால் இது போன்ற செயல்களை கைவிட ஊழியர்களுக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசின் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எச்சில் தொட்டு பிளாஸ்டிக் உறைகளைப் பிரிப்பதால் கொரோனா தொற்று பரவும் என்பதுடன் எச்சிலான அந்த பிளாஸ்டிக் உறையில் உணவு பொருட்களை நிரப்புவது சுகாதாரமானதாகவும் இருக்காது.
ஓட்டல் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் நாம் தினசரி சந்திக்கும் பலரும் இது போன்ற செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
பஸ்சில் கண்டக்டர் எச்சிலை தொட்டு டிக்கெட்டை கிழித்துக் கொடுப்பது, தபால் ஆபீசில் எச்சில் தொட்டு கடித உறைகளை ஒட்டுவது வங்கிகளில் – நிதி நிறுவனங்களில் எச்சில் தொட்டுப் பணத்தை எண்ணுவது பாடபுத்தகங்கள் செய்தித்தாள்கள் படிக்கும்போது எச்சில் தொட்டு விரிப்பது… தனிநபர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வங்கி, தபால் ஆபீஸ் போன்ற இடங்களில் உறைகளை பிரிக்க தண்ணீரில் ஊறிய பஞ்சை வைக்கலாம். தினசரி ரொக்கத்தை கையாளும் பணியில் இருப்பவர்கள் கண்டக்டர்கள் போன்றோர் தண்ணீரில் ஊறிய சிறிய பஞ்சு டப்பாவை தம் கையருகே வைத்துக் கொள்ளலாம்.
தனி நபர்களின் சுத்தமே, சமூகத்தின் சுத்தமாக – தேசத்தின் சுத்தமாக மாறும்.