fbpx
Homeபிற செய்திகள்தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதீர்!

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதீர்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீட்டுக்குத் தான் அதிகமான வட்டி வழங்கப் படுகிறது என்பதால், அது தான் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.

அப்படிப்பட்ட வருங்கால வைப்பு நிதி மீதான ஆண்டு வட்டி விகிதம், 2021-&22 ஆம் ஆண்டில், 8.10% ஆக குறைக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஒரே நேரத்தில் 0.40% குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது. வருங்கால வைப்பு நிதி மீது கடந்த 44 ஆண்டுகளில் இது தான் மிகவும் குறைவான வட்டியாகும்.

வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை. கொரோனா வைரஸ் பரவலால் 2020-&21 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

அப்போது கூட, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.5% ஆகவே நீடிக்கும் என்று வருங்கால வைப்பு நிதி வாரியம் அறிவித்திருந்தது. 2020&-21 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021-&22ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.

அதுமட்டுமின்றி, வருங்கால வைப்பு நிதி வாரியம் பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் மீது 15% வரை வருவாய் ஈட்டியுள்ள நிலையில், அதிலிருந்து 8.5% வட்டி கூட வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும்.

எதிர்கால சமூகப் பாதுகாப்புக்காக வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்கின்றனர். அதன் மீதான வட்டியைக் குறைக்கக்கூடாது. வட்டியைக் குறைத்திருப்பது தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது என்பதையே காட்டுகிறது.

எனவே, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைக்கப்பட்டதை உயர்த்தி, நடப்பாண்டிலும் 8.5% அல்லது அதற்கும் கூடுதலான வட்டி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
நாட்டிற்காக உழைக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதீர்!

படிக்க வேண்டும்

spot_img