இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் இருந்து முதன்முறையாக 11 வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது.
குறிப்பாக தடகள போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. அதில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், வறுமையும், ஏழ்மையும் சாதனைக்கு தடையில்லை.
திறமை, ஊக்கம் மற்றும் பயிற்சி இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தமிழக வீரர்கள் 5 பேர் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.
திருச்சியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், தனலட்சுமி, சுபா வெங்கடேசன், மதுரையை சேர்ந்த ரேவதி வீரமணி, நாகநாதன் பாண்டி ஆகியோரும் தான் இந்த ஐவர் அணி.
இவர்கள் எல்லோருடைய பின்புலத்தையும் பார்த்தால் எவ்வளவு முயற்சி இருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
அதிலும் குறிப்பாக ரேவதி காலணி இல்லாமல் வெறும் காலுடன் ஓடித்தான் தன் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி இருக்கிறார்.
தகுதி தேர்வு போட்டியில் ரேவதி முதலாவதாகவும், சுபா இரண்டாவதாகவும், தனலட்சுமி மூன்றாவதாகவும் வந்திருக்கிறார்கள். ஆரோக்கிய ராஜீவ் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனுபவத்தை பெற்றவர்.
அடுத்த வீரரான நாகநாதன் தமிழ்நாடு காவல் துறையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக இருக்கிறார்.
இவர்கள் தவிர பாய்மர படகு போட்டியில் நேத்ரா குமார், வருண் தக்கர், கே.சி.கணபதி ஆகியோரும், டேபிள் டென்னிஸ் போட்டியில் சத்யன், சரத்கமல் ஆகியோரும், வாள் சண்டை போட்டியில் பவானி தேவியும் இந்த போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.
ஒலிம்பிக்கில், வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி தான் என்பது கூடுதல் பெருமை.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள் ஒவ்வொருவருக்கும் முதல்அமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 6 பேர் மட்டுமே ஹாக்கி அணியில் விளையாடி ஒலிம்பிக் பதக்கம் பெற்றிருக்கிறார்கள்.
கடைசியாக 1980ம் ஆண்டு ஹாக்கி அணி தங்க பதக்கம் பெற்ற நேரத்தில் அந்த அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் இருந்தார். அதில் இருந்து இதுவரை தமிழ்நாட்டில் இருந்து யாரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதில்லை.
இப்போது ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்த 11 வீரர்களும் தங்கள் முழு திறமையையும் காட்டி 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்று தமிழக மக்கள் வாழ்த்துகிறார்கள்.
இப்போது ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. தமிழ்நாட்டில் திறமைக்கு பஞ்சமில்லை. சின்ன கிராமங்களில் கூட திறமையானவர்கள் இருக்கிறார்கள்.
இளம் வயதிலேயே அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய அணியா? அதில் தமிழக வீரர்கள் தான் பதக்கங்களை கொண்டு வந்து நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள் என்ற பெருமை பெறும் வகையில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.