தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கும் நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ள நிலையில் இப்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார்.
தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரிசையில் அவர் இனி முக்கிய இடத்தை பெறுவார். தேசிய பிரச்சினைகளில் அவரது குரல் எப்படி ஒலிக்கப்போகிறது? என்பதை நாடு உற்று நோக்குகிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் எப்போதுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி தான் ஆட்சியை பிடிக்கும்.
ஆனால் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை பிடித்து ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது.
எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியில் 140 இடங்கள் கொண்ட கேரள சட்டசபையில் 99 இடங்களை பெற்று ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கூட்டணியில் ஒன்றாக இருக்கும் நிலையில் கேரளாவில் எதிரும், புதிருமான கட்சிகளாக இருக்கிறது.
எந்த பிரச்சினை என்றாலும் போர்க்குரல் எழுப்பும் பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அரசாங்கமும், எல்லோரையும் கவரும் அரசாங்கமாகத்தான் இருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. 292 இடங்களில் 213 இடங்களில் வெற்றி பெற்று இந்த பெண் சிங்கம் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது.
நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மிகவும் துணிச்சல் மிக்கவர். எப்படியும் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று 3 மாதங்களில் நரேந்திர மோடி 17 முறையும், அமித்ஷா 21 முறையும் சுற்றுப்பயணம் செய்தும், அவரது வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆக இனி அவரது குரலும், தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஓங்கி ஒலிக்கும்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் பாஜவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் புதுச்சேரியில் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.
கடந்த முறை ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று இருக்கிறது. இங்கு பிஜேபி தன் கால் தடத்தை பதித்து புது கணக்கை தொடங்கி விட்டது.
இதேபோல அஸ்ஸாம் மாநிலத்தில் பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி போட்டியிட்டும், ஏற்கனவே ஆட்சியில் இருந்த பிஜேபி கூட்டணியை தோற்கடிக்க முடியவில்லை.
அஸ்ஸாம் மாநிலத்தில் பிஜேபி தன்னை அசைக்க முடியாத சக்தியாக நிரூபித்து விட்டது. அங்கு இப்போது முதலமைச்சராக இருக்கும் சர்பானந்த சோனோவால் தொடர்வாரா? ஹிமந்த் பிஸ்வா சர்மா பதவி ஏற்பாரா? என்பதில் தான் சிக்கல் இருக்கிறது.
மொத்தத்தில் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளும் புதுப்புது பாடங்களை, கணக்குகளை தேசிய அரசியலில் வகுத்து இருக்கிறது.