fbpx
Homeபிற செய்திகள்‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ 63 துவக்கப் பள்ளிகளில் துவக்கம் பயனடையும் மாணவர்கள் 3415

‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ 63 துவக்கப் பள்ளிகளில் துவக்கம் பயனடையும் மாணவர்கள் 3415

நீலகிரி மாவட்டத்தில் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்’ கீழ், 63 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், மக்களின் நலன் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களையும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’ திட்டம் போன்ற சிறந்த திட்டங்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மிதிவண்டிகள், சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

நகரப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை.

பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமல்லாமல், சிலரின் குடும்ப சூழ்நிலையும் இதற்கு காரணமாக உள்ளதை கருத்தில் கொண்டு, முதல்வர் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110-ன் கீழ் அறிவிப்பினை வெளியிட்டார்.

38 மாவட்டங்களில்
மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சிப் பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளிலும் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளிலும் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு,1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் மெனு
இத்திட்டத்தின்படி, திங்கள்கிழமை சேமியா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை கோதுமை ரவை மற்றும் காய்கறி கிச்சடி,புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா, காய்கறி கிச்சடி, ரவை கேசரி ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

இத்திட்டம் 15.09.2022 அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டமானது முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில், வனத்துறை அமைச்சர் கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 16.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைப்புப் பணி
இத்திட்டத்தின் மூலம் 63 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள்.

இத்திட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் ஒருங்கிணைப்புப் பணிகள்செய்யப்படுகின்றன.

வருகை அதிகரிப்பு
இத்திட்டம் குறித்து ஆசிரியை ஆயிஷா கூறியதாவது:
கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீமதுரை துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

இத்திட்டத்தின் நோக்கமானது மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப் படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் போன்றவை ஆகும்.

இத்திட்டம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும் வரவேற்கத்தக்க ஒரு திட்டமாகும்.

இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தியதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்வருக்கு எனது சார்பாகவும், பள்ளியின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“பசியாறுகிறாள் மகள்”
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தையின் தாயார் ரேணுகா தேவி கூறியதாவது: எனது மகள் பெயர் மித்ரா. கூடலூர் காமத்தி கிராமத்தில் வசித்து வருகிறேன். மகள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீமதுரை துவக்கப் பள்ளியில், 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நானும் எனது கணவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக காலை நேரத்தில் வேலைக்கு சென்று விடுவோம். குழந்தைகளுக்கு காலையில் உணவு செய்து கொடுத்து விட்டு செல்வதென்பது மிகவும் சிரமமாக இருந்தது.

சில நேரங்களில் காலை உணவு இல்லாமல் மகள் பள்ளிக்கு செல்வாள். இச்சூழ்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் மூலம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் காலை உணவுகள் வழங்கப்படுகின்றன.

கிராமக் குழந்தைகளின் தேவை அறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முதல்வர் தலைமையிலான தமிழக அரசு, குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் வகையில் இது போன்ற ஒரு சிறந்த திட்டத்தினை கொண்டு வந்து மிகச் சிறப்பாக நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தியமைக்காக, மாவட்ட பெற்றோர், ஆசிரியர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img