fbpx
Homeபிற செய்திகள்'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 இடத்தில் பசியாறும் அரசு தொடக்கப் பள்ளி...

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 இடத்தில் பசியாறும் அரசு தொடக்கப் பள்ளி சிறார்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ 19 இடங்களில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு’
என்ற திருவள்ளுவர் கூற்றிற்கேற்ப, பசி என்பது கொடியது. ஆதலால் அதனை போக்குவது அனைவரின் கடமை. எல்லோர் பசியையும் போக்குவது அரசாங்கத்தின் அல்லது ராஜ்ஜியத்தின் பொறுப்பாக்கிவிட்டு மக்கள் சென்று விட முடியாது. ஏனெனில் எல்லோர் பசியையும் போக்குவது அவ்வளவு எளிதானதும் அல்ல. அதனை அரசாங்கம் செய்வது நடைமுறையில் மிக மிக சிரமம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்படும், முதல்வர் ஸ்டாலின் இச்சிரமங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதாலும், பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழ்நிலையும் காரணமாக இருப்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை மனதில் கொண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப்பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை, முதற்கட்டமாக சில மாநகராட்சிகள், நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் தொடங்க, சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
அத்திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் முதல்வர் கடந்த 15.09.2022 அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை பரிமாறி மழலைகளுடன் உணவருந்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள் என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப்பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

ரத்த சோகையை நீக்க
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்ததாவது:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிக்குளம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 16.09.2022 முதல் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் நோக்கம் சிறுவயது மாணவ/மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தலை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதற்காகவும், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிகளில் வருகையை அதிகரித்தல்/ தக்க வைத்துக் கொள்ளவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைப்பதற்குத்தான்.
காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் FSSI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்கவும், நகர்ப்புறப்பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறை அல்லது வேறு ஏதேனும் தகுதிவாய்ந்த அமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்.


ஊரகப் பகுதிகளில் கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருட்கள் (Extraneous substance) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும்.

தயார் செய்யப்பட்ட உணவினை குழந்தைகளுக்கு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு உணவினை ருசி பார்த்தல் வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட வாட்டர் டேங்க் சாலையில் அமைந்துள்ள சமைய லறை ஒருங்கிணைந்த மைய சமையற் கூடமாக புதுப்பிக்கப்பட்டு காலை சிற்றுண்டி வழங்க தயார்நிலையில் உள்ளது.


இம்மையத்திலிருந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வெட்டூர்ணிமடம், கலுங்கடி வடசேரி, வடசேரி, வடிவீஸ்வரம், வடக்கு இளங்கடை, தெற்கு இளங்கடை, சரக்கல்விளை, நாகர்கோவில் டவுன், கோட்டார் வாகையடி, பறக்கைரோடு சந்திப்பு, செட்டிக்குளம், சூரங்குடி, இலந்தையடி, பூச்சிவிளாகம், சித்திரைத்திருநாள் மகாராஜபுரம், கோவில்விளை, கீழகாட்டுவிளை, குளத்துவிளை, புல்லுவிளை உள்ளிட்ட 19 இடங்களில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த.

“கவனம் அதிகரிக்கும்”
செட்டிக்குளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மரிய பௌஸ்டின் தெரிவித்ததாவது:
செட்டிக்குளம் பகுதியை சுற்றியுள்ள ஏழை, எளியவர்களின் குழந்தைகள் பலர் படிக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை என எங்களிடம் கூறி வந்த சூழ்நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்ததன் பயனாக குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதோடு, பாடத்திலும் கவனம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் ஏற்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பாடம் கற்பிக்க முடிகிறது. திட்டத்தினை செயல்படுத்திய முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“மிகவும் மகிழ்ச்சி”
காலை உணவுத் திட்டத்தினால் பயனடைந்த உதயா தெரிவித்ததாவது:
செட்டிக்குளம் பகுதியில் வசித்து வருகிறேன். கணவரின் சிறு வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறேன். மகன் செட்டிக்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். முதல்வர் காலை உணவுத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளதால், மகன் தினமும் காலை உணவு சாப்பிடுவதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
குழந்தைகளின் பசியினை தீர்த்து வைப்பதற்காக திட்டத்தை கொண்டு வந்த முதல்வருக்கு பெற்றோர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
பா.ஜாண் ஜெகத் பிரைட்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
ஜா.லெனின்பிரபு,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கன்னியாகுமரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img