fbpx
Homeபிற செய்திகள்‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ஆற்காடு நகராட்சியில் 6 தொடக்கப்பள்ளிகளில் தினமும் உணவு உண்ணுவோர் 600...

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ஆற்காடு நகராட்சியில் 6 தொடக்கப்பள்ளிகளில் தினமும் உணவு உண்ணுவோர் 600 பேர்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்’ மூலம் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் 6 அரசு தொடக்கப்பள்ளிகளில், நாள்தோறும் சராசரியாக 600 மாணவ, மாணவிகள் காலை உணவினை மகிழ்ச்சியுடன் உண்டு வருகின்றனர்.

முதல்வர் “எல்லோர்க்கும் எல்லாம்”என்ற சமூக நீதி கொள்கையோடு பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை, எளியோர் வீட்டுப்பிள்ளைகள்-ஒடுக்கப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகள் எதன் காரணமாகவும் பள்ளிக்குச் செல்வது தடைபடாமல் சமவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

வறுமையோ- சாதியோ எதுவும் ஒருவரது கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரும் நினைத்தார்கள்.

பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகள் பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக் கூடாது என்ற உன்னத நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 15.09.2022 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று நடைபெற்ற விழாவில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்படி நாள்தோறும் முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் முதல்கட்டமாக பயனடைந்து வருகிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் இராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆற்காடு நகராட்சியில் ராஜாவேடு துவக்கப்பள்ளியில் 68 மாணவ மாணவிகளும், நகராட்சி முஸ்லீம் ஆண்கள் துவக்கப்பள்ளி 23 மாணவர்களும், நகராட்சி முஸ்லீம் பெண்கள் துவக்கப்பள்ளி 34 மாணவிகளும், கிளைவ் பஜார் துவக்கப்பள்ளி 17 மாணவ மாணவிகளும், தோப்புகானா தெற்கு துவக்கப்பள்ளி 240 மாணவ, மாணவிகளும், தோப்புகானா வடக்கு துவக்கப்பள்ளி 279 மாணவ, மாணவிகளும் என மொத்தமாக 6 அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 661 மாணவ, மாணவிகள் உள்ளனர்.

இவர்களில் நாள்தோறும் சராசரியாக 600 மாணவ, மாணவிகள் காலை உணவினை மகிழ்ச்சியுடன் உண்டு வருகின்றனர்.

விதவிதமான உணவு
திங்கள்கிழமை உப்புமா வகை, (ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமா அல்லது அரிசி உப்புமா அல்லது கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்) செவ்வாய் கிழமை கிச்சடி வகை (ரவா அல்லது சேமியா அல்லது சோளம் அல்லது கோதுமை காய்கறி கிச்சடி) புதன் கிழமை பொங்கல் வகைகள் (ரவா அல்லது வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்) வியாழக் கிழமை உப்புமா வகை (ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமா அல்லது அரிசி உப்புமா அல்லது கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்) வெள்ளிக் கிழமை கிச்சடியுடன் இனிப்பு (ரவா அல்லது சேமியா அல்லது சோளம் அல்லது கோதுமை காய்கறி கிச்சடி) ஆகிய மேற்குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலின் படி தினசரி ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் காலை உணவானது 150-&200 கிராம் என்ற அளவில் 60 கிராம் காய்கறியுடன் வழங்கப்பட்டு வருகிறது. காலை பள்ளி தொடங்கும் முன் மாணவ / மாணவிகளுக்கு காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் வழங்கப்படுகிறது.

“மிகவும் மகிழ்ச்சி”
எனது பெயர் அர்ச்சனா. கணவர் யுவராஜ். வாகன ஓட்டுநர். இரண்டு குழந்தைகள். இருவரும் நகராட்சி தொடக்கப்பள்ளி (தோப்புகானா) தெற்கு பள்ளியில் படிக்கின்றனர். ஸ்ரீராம் 3-ம் வகுப்பும், திவ்யஸ்ரீ 2-ம் வகுப்பும் படிக்கின்றனர். வேலைக்கு சீக்கிரமாக சென்று விடுவதால், குழந்தைகள் தினமும் சரியாக சாப்பிடாமல் சென்று விடுவார்கள்.

இப்போது, ஒவ்வொரு நாளும் விதவிதமாக காலை உணவு சாப்பிடுகிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி என்றார்.

“வயிறார சாப்பிடறாங்க”
எனது பெயர் மாபு பீ. கணவர் அப்துல் முனாப். சிறிது காலம் முன்பு காலமாகிவிட்டார். நாங்கள் குடும்பத்துடன் ஆற்காட்டில் வசித்து வருகிறோம். ஆற்காடு, நகராட்சி முஸ்லீம் பெண்கள் தொடக்கப் பள்ளியில் உமெரா பானு 3-ம் வகுப்பு படிக்கிறாள்.

தமிழக அரசு ஏற்கனவே மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி நடத்திட்டு இருக்காங்க. முதல்வர் இப்போது காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். காலையில் எழுந்து சமைத்து, குழந்தைகளை அவசர, அவசரமாக ரெடிபண்ணி அனும்பும்போது, குழந்தைகள் வயிராற சாப்பிடாமல் கிளம்பி சென்று விடுகின்றனர்.

இப்போது பள்ளியில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் வீட்ல சாப்பிடாம போனாலும், பள்ளியில் வயிறார சாப்டுறாங்க என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. வாரத்தில் ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவினை வழங்குகிறார்கள். இந்த திட்டத்தை கொண்டு வந்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

“காலையிலேயே சத்தான உணவு”
குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்ததாவது:
எனது பெயர் செம்மலர். கணவர் செல்வராஜ். கட்டிட தொழிலாளி. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் நகராட்சி தொடக்கப்பள்ளி (தோப்புகானா) வடக்கு பள்ளியில் படிக்கின்றனர். திவ்யஸ்ரீ 5-ம் வகுப்பும், தனந்திகா 2-ம் வகுப்பும் படிக்கின்றனர். வேலைக்கு சீக்கிரமாக சென்று விடுவதால் குழந்தைகள் தினந்தோறும் பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் சென்று விடுவார்கள்.

தற்போது, ஒவ்வொரு நாளும் விதவிதமாக சத்தான காலை உணவு சாப்பிடுகிறார்கள். இந்த காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி என்றார்.

தொகுப்பு;
செ.அசோக்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img