பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த குரலோசை அதிகமாகவே கேட்கிறது.
கல்வி மாநில பட்டியலில் இருந்தால் ஒன்றிய அரசால் அதில் தலையிட முடியாது. அனைத்துமே ஒன்றிய அரசின் கீழ் தான் இயங்க வேண்டும் என்றால் மாநில சுயாட்சி என்பது கேள்விக்குறியாகி விடும்.
மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருந்தால் ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட மொழியை திணிக்கவும் வழிகோலும். இது தேவையற்ற பிரச்சனைகளுக்கும் காரணமாகி விடக் கூடும்.
பல்வேறு பின் விளைவுகளை ஆய்ந்து, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்த நேற்று கிடைத்த வாய்ப்பை அவர் தவற விடவில்லை. திண்டுக்கல் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கல்வி என்பது அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போதே மாநில பட்டியலில் வழங்கப்பட்டிருந்த உரிமை.
இடையில் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்‘ என பிரதமர் மோடி இருக்கும் போதே நேரில் அவரிடம் கோரிக்கை விடுத்தார்.
அவரது இந்த கோரிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தபோது பிரதமர் மோடியை இபிஎஸ், ஓபிஎஸ் புகழ்ந்து தள்ளியதை பார்த்திருக்கிறோம்.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உரிமைக்கான கோரிக்கையை உரக்க பேசி இருப்பது பாராட்டுக்குரியது.
கல்வி பொதுப்பட்டியலில் நீடித்தால் மாநில அரசு தன்னுடைய மாநில மொழியையும் கலாச்சாரத்தையும் இழக்க கூடிய நிலையை கொண்டு வந்துவிடும். எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதே சாலச்சிறந்தது.
தமிழக முதல்வரின் கல்விக் கோரிக்கையை பிரதமர் ஏற்பாரா?