fbpx
Homeதலையங்கம்வாக்குப்பதிவில் மந்தம் கூடாது!

வாக்குப்பதிவில் மந்தம் கூடாது!

தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூகமாக நிறைவடைந்திருக்கிறது.

ஆனால் 11 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில், அதிகப்பட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பேரூராட்சியில் 74.68 சதவீதமும், நகராட்சியில் 68.22 சதவீதமும், மாநகராட்சியில் 52.22 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பேரூராட்சிகளை விட மாநகராட்சிகள், நகராட்சிகளில் மிகவும் குறைவான சதவீதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைவான வருமானம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. உயர்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் நகரப் பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாகவே நடந்துள்ளது.

நகரங்களில் பல வாக்குச் சாவடிகளில் பெண்கள் பெரிய அளவில் வந்து வாக்களிக்கவில்லை. மதுரை, கோவையில் முறையே 53.99% மற்றும் 53.6% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதற்கு நகர்ப்புற வாக்காளர்களின் அக்கறையின்மையே காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் வாக்குகள் மிகமிக குறைவாக பதிவானதற்கு என்ன காரணம்? மாநகராட்சியின் முன்னாள் மேயரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், கோவிட்-19 காரணமாக 15 முதல் 20 சதவீத வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர், அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். இது தான் வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்.

வாக்களிப்போம், ஜனநாயக கடமையை ஆற்றுவோம் என தேர்தல் ஆணையமும் வாக்களிக்க மறவாதீர்கள் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் வாக்குப்பதிவில் பெரும் சரிவு ஏற்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

ஜனநாயகத்துக்கே மகுடமாகத் திகழும் இந்தியாவில்…அதுவும் தமிழ்நாட்டில் இப்படி நடந்திருக்கக் கூடாது. வாக்குகளைப் பதியாமல் தவிர்ப்பதை தேச விரோதம் என்று சொல்வதா? தேசத் துரோகம் என்று சொல்வதா?

நடந்தது என்ன நாடாளுமன்றத் தேர்தலா, சட்டப்பேரவைத் தேர்தலா, உள்ளாட்சித் தேர்தல் தானே என வாக்காளர்கள் ஏனோ தானோ மனப்பான்மையில் கை விரலில் மையிடுவதை மறந்து விட்டனரோ? ஜனநாயகத்தின் ஆணிவேரே கிராம ராஜ்யம் தானே… உள்ளாட்சி அமைப்புகள் தானே.

100% வாக்குப்பதிவை நோக்கிச் சென்ற பயணத்தில் சறுக்கல் ஏற்பட்டிருப்பது வேதனை தருகிறது. இனி ஒருபோதும் வாக்குப்பதிவில் இறங்குமுகம் வரக்கூடாது; ஏறுமுகமே நீடிக்க வேண்டும்.

வருங்காலங்களில் மறக்காமல் வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகத்தைப் போற்றிப் பாதுகாப்போம்!

படிக்க வேண்டும்

spot_img