fbpx
Homeதலையங்கம்வெற்றி மகுடம் சூடிய முதல்வர் ஸ்டாலினின் பொறுப்பான பேச்சு!

வெற்றி மகுடம் சூடிய முதல்வர் ஸ்டாலினின் பொறுப்பான பேச்சு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்களின் கோட்டைகள் என கருதப்பட்டு வந்த பல பகுதிகளை தி.மு.க தகர்த்தெறிந்துள்ளது.

21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது.

அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் 23வது வார்டில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் குச்சனூர் பேரூராட்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் சொந்த தொகுதிகளில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ளது. கோவை, திருச்சி மாநகராட்சிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது அ.தி.மு.க.

கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் தி.மு.க 76 வார்டுகளில் வென்றுள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 9 இடங்களில் வென்றுள்ளது. கோவை மண்டலத்தில் வலிமை வாய்ந்தது அ.தி.மு.க என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் 3 வார்டுகளில் மட்டுமே வென்று ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 இடங்களில் தி.மு.க 49 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க 3 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 153 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை தி.மு.க தம்வசமாக்கியுள்ளது. அ.தி.மு.க சென்னையில் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பா.ஜ.க, பல இடங்களில் அ.தி.மு.கவை பின்னுக்குத் தள்ளியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படி இருக்கையில், அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியது என்ன தெரியுமா? முழு வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய நற்சான்றுதான் இந்த வெற்றி. மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற தயாராக இருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்றுப் பதிவாக்கும் அளவுக்கான சாதனையை செய்து கொண்டிருக்கிறோம். செய்யப்போகிறோம்.

இந்த வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிதான் இங்கே நிற்க வைத்திருக்கிறது.

என்னுடைய பணிவான உரிமை கலந்த வேண்டுகோள் என்னவென்றால், இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும்.
மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.

மக்களுக்காக உண்மையாக இருந்து உழைக்க வேண்டும். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும். உங்கள் மீது எந்த புகாரும் வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனை நான் தொடர்ந்து நிச்சயமாக உறுதியாக கண்காணித்துக் கொண்டே இருப்பேன். யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்பேன். தயங்க மாட்டேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பொறுப்பான பேச்சு தமிழக மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கட்சிக்கோ, ஆட்சிக்கோ யாரும் களங்கம் ஏற்படுத்தி விடாதபடி முதல்வர் கண்காணிக்க உள்ளார். அவரை மீறி யாரால் கேடு விளைவிக்க முடியும்?
நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் நல்லாட்சி அமையப்போகிறது.

மீண்டும் வெற்றி மகுடம் சூடிய நல்லாட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் வென்றெடுத்த ஈடு இணையில்லாத இமாலய வெற்றியை தமிழ்நாடே கொண்டாடுகிறது, நாடே போற்றுகிறது.

வாழ்த்துக்கள்!

படிக்க வேண்டும்

spot_img